சரணடைந்தோரின் பட்டியலை வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன்: மைத்திரி உறுதி- (வீடியோ)

0
98

 

இறுதிக்கட்டப் போரின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் இதுவரை தடுப்பு முகாமில் இருந்தவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி வடக்கில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, நாளைய தினம் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கு இது தொடர்பில் கட்டளையிடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

எனினும் அந்தப் பட்டியலை எங்கு பெற முடியும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்காது தவிர்த்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் நோக்கில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உருவாக்கியுள்ள ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்ற செயற்திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு மாதமும் வடபகுதி மக்களின் குறைகளை கேட்டறியும் திட்டத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் போரின்போது ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு 100 நாட்களை கடந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் ஜனாதிபதியை சந்தித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் மற்றும் இதுவரை தடுப்பு முகாமில் இருந்தவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு நாளைய தினம் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தில் பாதுகாப்பு பிரிவுக்கு கட்டளையிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது வாக்குறுதி அளித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட 4 கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாசித்து ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப் பேச்சாளரான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வரை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.