சசிகலாவால் உருவான ‘நால்வர் அணி’! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – அத்தியாயம்- 27

0
680

ஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி!

போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் மூழ்கத் தொடங்கியது.

அதில் மூச்சுத் திணறியவர்கள், தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள எங்கேயாவது ஒரு பிடிமானம் கிடைக்குமா என்று தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அப்படித் தத்தளித்தவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கரையேறி கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு கூடாரம் போடும் வேலையிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

அதற்கான ஆலோசனைகள் நாவலர் நெடுஞ்செழியன் வீட்டில் பல நாட்கள், பல மணி நேரங்கள் நடைபெற்றன.

ஏற்கெனவே, அ.தி.மு.க என்ற மிகப்பெரிய அரசியல் கட்சி ஜா.அணி – ஜெ. அணி என்று பிளவுபட்டுக் கிடந்தநிலையில், ஜெ.அணிக்குள்ளேயே ஒரு சீனியர் அணி உருவாக நாவலர் வீடு களமாக அமைந்தது.

nadarajan_new_2_14419ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் நடராஜன்!

ஜெயலலிதா அணிக்குள் ஒரு சீனியர் அணி உருவாவதற்கு பல காரணங்கள் இல்லை. அதற்கு ஒரே காரணம், சசிகலா குடும்பம். ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக திருநாவுக்கரசு, 24 கராத்தே வீரர்களை வைத்து ஏற்படுத்தி இருந்த பாதுகாப்புப் படையை சசிகலா அப்புறப்படுத்தினார்.

திவாகரன் தலைமையில் நடராஜன் புதிதாக ஒரு கறுப்புப் பூனைப் படையை ஜெயலலிதாவுக்காக அமைத்துக் கொடுத்தார். அந்தக் கறுப்புப் பூனைப்படையின் தொந்தரவு தாங்காமல் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் அவதிப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே அவர்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், ஜெயலலிதா தனது புதிய அரசியல் ஆலோசகர் என்று எல்லா இடத்திலும் நடராஜனை அடையாளப்படுத்த ஆரம்பித்தார்.

அதுவரைக்கும், நாவலர், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சேலம் கண்ணன் போன்றவர்கள்  சசிகலாவை ஜெயலலிதாவின் உதவிக்கு வந்த பணிப்பெண் என்ற தோரணையில்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், நடராஜன் ஜெயலலிதாவின் முழு அரசியல் ஆலோசகர் ஆனபோது, எல்லாம் தலைகீழானது. குறிப்பாக ஜானகி ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஜெ.அணியின் ஆலோசனைகள் நடந்தபோதே ஜெயலலிதா நடராஜனை தனது ஆலோசகராக காட்டத் தொடங்கி இருந்தார்.

ஜெ.அணியில் அரசியல் விவகாரக் குழு என்று ஒன்று இருந்தது. அதில் நாவலர், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, எஸ்.டி.எஸ் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

இவர்கள் விவாதித்துத்தான் ஜெயலலிதாவுக்காக முடிவெடுப்பார்கள். அந்த ஆலோசனைக் கூட்டங்களில், ஜெயலலிதா நடராஜனையும் அழைத்து உட்கார வைக்கத் தொடங்கினார்.

நாவலரும் பண்ரூட்டியாரும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஜெயலலிதா குறுக்கிட்டு, “நடராஜன் இதில் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்க ஆரம்பித்தார்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நடராஜனும் தனது ஆலோசனைகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று இரண்டு களங்களிலும் தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்களை எல்லாம், தங்கள் தர்க்கத்தாலும், வாதத்தாலும் தெறிக்கவிட்டவர்கள் நாவலரும் பண்ரூட்டியும். அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து  நடராஜன் ஆலோசனை சொல்வதை அவர்களால் பொறுக்க முடியவில்லை; சகிக்க முடியவில்லை.

மன்னார்குடியின் மயக்கம் ஒரு புரியாத புதிர்!

போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலாவை மீறி ஜெயலலிதா எதையும் செய்வதில்லை; பொதுக்கூட்ட மேடைகளில் திவாகரனின் பூனைப்படையை  மீறி ஜெயலலிதாவை யாரும் நெருங்க முடியவில்லை.

அரசியல் விவாதங்கள் என்றால், அங்கும் இப்போது இடைஞ்சலுக்கு நடராஜன் வரத் தொடங்கிவிட்டார்; புதிதாக தினகரனும் போயஸ் கார்டனுக்குள் வலம் வருகிறார்.

சசிகலா குடும்பத்துக்கு ஜெயலலிதா இவ்வளவு இடம் கொடுப்பது ஏன்? என்பது சீனியர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. சசிகலா குடும்பம் போயஸ் கார்டன் வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், கட்சிக்குள் ஏன் தலையிடுகிறார்கள்?

அதை ஏன் ஜெயலலிதா அனுமதிக்கிறார்? ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பட்டியலைத்  தயாரிக்க இவர்கள் யார்? இந்தக் குடும்பத்தை வெளியேற்ற என்ன செய்யவது என்று சீனியர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

சசிகலா-நடராஜன் என் நலம்விரும்பிகள்! – ஜெயலலிதா

sasikala_nadarajan_14110சசிகலா-நடராஜனை வீட்டுவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் சொல்ல ஆரம்பித்தனர்.

இதை நால்வர் அணி சார்பில் ஜெயலலிதாவிடம் முதலில் சொன்னவர் திருநாவுக்கரசுதான். அவருக்கு ஜெயலலிதா அப்போது சொன்ன பதில், “சசிகலா-நடராஜன் என் குடும்ப நண்பர்கள், என் நலம் விரும்பிகள்.

அவர்களைக் கட்சியில் விட்டு நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று முகத்தில் அடித்ததுபோல் சொன்னார்.  திருநாவுக்கரசு மிரண்டுபோனார்.

நிலைமை இப்படி முற்றிய நிலையில், ஜெயலலிதா ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையைத் தொடங்கினார்.

கட்சிக்காக அந்தப் பத்திரிகை என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், அதன் பங்குதாரர்களாக கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. ஜெயலலிதா, சசிகலா, நடராஜன், திவாகரன் பெயர்களை ‘நமது எம்.ஜி.ஆர்’ பங்குதாரர்கள் பட்டியலில் இருந்தது.

கட்சிக்காக வசூல் செய்யப்பட்ட பணம், பத்திரிகையில் முடக்கப்பட்டது. கட்சியின் பொருளாளராக பெயருக்குத்தான் திருநாவுக்கரசு இருந்தார்.

ஆனால், கட்சியின் வரவு செலவு விபரங்கள் அவருக்குத் துளியும் தெரியாமல் மறைக்கப்பட்டது. ஜெயலலிதா பெயரில் நடராஜன் பணம் எடுத்துக் கொண்டே இருந்தார்.

பணத்தை நடராஜன், தனக்காக செலவு செய்தாரா? ஜெயலலிதாவுக்காக செலவு செய்தாரா? என்பது நடராஜனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த விஷயங்களும் நால்வர் அணியிடம் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது.

நடராஜன் கொளுத்திய வெடிகள்!

கட்சியின் சீனியர்களுக்கும் மன்னார்குடி குடும்பத்துக்கும் ஏற்பட்ட மோதல் பனிப்போராகத் தொடர்ந்தது. நாவலர் நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம் உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயல்பட்டனர்.

சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் மற்றொரு அணியாக செயல்பட்டனர். கட்சிக்குள் பிளவுக்கான வேர் விடத் தொடங்கியது. ஆனாலும் பிளவு நிகழ்ந்துவிடவில்லை.

அதற்கு ஒரே காரணம், ஜா.அணியை தோற்கடித்து, ஜெ.அணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அனைவரும் அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்பதே.

ஆனால், நடராஜன் “ஆட்சியைப் பிடிப்போம்… அதிகாரத்தைச் சுவைப்போம்… அதில் பங்கு கேட்க யாரும் இருக்கக்கூடாது!” என்று களமிறங்கிச் செயல்பட்டார். வாய்ப்புக் கிடைக்கம் போது எல்லாம் வேட்டுக்களை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

“காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால்தான் நமக்கு வெற்றி” என்று நாவலரும் பண்ரூட்டியும் சொல்லிவந்தனர். அதையே நடராஜன் ஜெயலலிதாவிடம், “இவர்கள் இருவரும் உங்களைத் தனியேவிட்டுவிட்டு காங்கிரஸுடன் போய்விடுவார்கள்” என்று கொஞ்சம் மாற்றிச் சொன்னார்.

ஜெயலலிதா அதை நம்பினார். திருநாவுக்கரசு புதுக்கோட்டைக்கு தற்செயலாக சென்றிருந்தார். அதை நடராஜன் ஜெயலலிதாவிடம், “திருச்சியில் மூப்பனார் மாநாடு நடத்துகிறார். அதற்கு ஆள் சேர்க்க திருநாவுக்கரசு போய் இருக்கிறார்” என்று போட்டு வைத்தார்.

அதையும் ஜெயலலிதா நம்பினார். சேலம் கண்ணன் தன் நண்பர்களிடம், “ஜெயலலிதாவிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது” என்று சொல்லிவந்தார்.

அதை நடராஜன் ஜெயலலிதாவிடம், “உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை சேலம் கண்ணன் பொது இடத்தில் பேசுகிறார்” என்று வத்தி வைத்தார்.

ஜெயலலிதா அதையும் நம்பினார். அதனால், அவர்கள் அனைவரையும் ஜெயலலிதா கொஞ்சம் தள்ளிவைக்க ஆரம்பித்தார். அப்படித் தள்ளிவைக்கப்பட்டவர்களால்,  ஜெயலலிதாவை நெருங்கி தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லவிடாமல் திவாகரனின் கறுப்புப் பூனைப்படை தடுத்து வைத்தது.

ஜா.அணி-ஜெ.அணி வரிசையில் ‘நால்வர் அணி’
nalvar_14426

கட்சிக்குள் இருந்த இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜெ.அணியை இரண்டாகப் பிளந்தது ஒரு அரசியல் விவகாரக்குழுக் கூட்டம். அந்தக் கூட்டத்தை திடீரென்று ஜெயலலிதா, தலைமைக் கழகத்தில் கூட்டப்போவதாக அறிவித்தார்.

“அந்தக்கூட்டத்துக்கு இப்போது என்ன அவசியம்… தேர்தல்கூட அறிவிக்கப்படவில்லையே” என்று சீனியர்கள் அணி  கேள்வி எழுப்பியது.  அது ஜெயலலிதா காதில் கேட்கவில்லை போல… அவர் சொன்னதுபோல் கூட்டத்தை நடத்தினார்.

ஆனால், அதற்கு சீனியர்கள் யாரும் போகவில்லை. மறுநாளும் அந்தக் கூட்டத்தைக்கூட்டினார். அப்போதும் சீனியர்கள் வரவில்லை. உடனே அவர்களுக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பினார். அது உச்சக்கட்டமாக சீனியர்களின் ஈகோவைக் கிண்டிவிட்டது.

அவர்கள் தனியாகப் பிரிந்துபோய் புதிதாக ஒரு அணியை ஆரம்பித்தனர். நாவலர் நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு அதில் அங்கம் வகித்தனர்.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தைத் தாக்குப்பிடிக்காதவர்கள், தமிழகத்தில் ஆரம்பித்த அந்த அரசியல் அணி “அ.தி.மு.க நால்வர் அணி” என்று அழைக்கப்பட்டது.

சசிகலா குடும்பத்தின் தொந்தரவுகள் தாங்காமல் உருவான இந்த அணியை, ஒருவகையில் சசிகலா உருவாக்கிய நால்வர் அணி என்றே எடுத்துக்கொள்ளலாம்.

கதை தொடரும்…

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளீக் செய்யவும்

 

ஜோ.ஸ்டாலின்
படங்கள் – சு.குமரேசன்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.