கே பி யின் போர் நிறுத்தத் திட்டமும், பிரபாகரன் நிலைப்பாடும்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 51) -சிவலிங்கம்

0
739

அமெரிக்க தூதரின் காட்டமான அபிப்பிராயங்களால் கவலையுற்ற இலங்கை அரசும், ஊடகங்களும் நோர்வேயின் நடவடிக்கைகளை விமர்ச்சிக்கத் தொடங்கின.

குறிப்பாக நோர்வே  தூதுவர் ரோ ஹற்றம்  (Tore Hattrem) அவர்களுக்கும், கே பி இற்குமிடையே  இடம்பெற்ற   இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள்  உள்ளுர் ஊடகங்களில் புலிகளைப் பாதுகாப்பாக வெளியே அனுப்ப நோர்வே முயற்சிப்பதாக வெளியிட்டிருந்தன.

இச் செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும், இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்புக் குறித்தே பேசியதாக அவர் தெளிவுபடுத்தினார். அத்துடன் இச் சந்திப்புப் பற்றிய விபரம் முன்கூட்டியே ஜனாதிபதிக்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால் நோர்வே தூதுவராலயத்தின் முன்னால் நோர்வே தூதுவர் புலிகளின் சீருடையுடன் காணப்படும் போலிப் படங்களைத் தாங்கியவாறு அந்நிய பயங்கரவாதிகளை வெளியேற்றுங்கள் என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

wimal2

இவற்றை விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினரும், பௌத்த ஆதரவாளர்களான ஜாதிக கெல உறுமய இனருமே நடத்தினர்.

இலங்கை அரசின் இரட்டை வேடத்தைச் சுட்டிக் காட்டிய எரிக் சோல்கெய்ம், புலிகளுடனான தொடர்பை நன்கு பேணி வந்த அதே வேளை அவர்களின் நடத்தைகளை போரின் இறுதி வரை விமர்ச்சித்து வந்தார்.

இதன் மறு பக்கத்தில் குறிப்பாக பிரித்தானியா, கனடா, நோர்வே போன்ற நாடுகளிலுள்ள புலம் பெயர் தமிழர்கள் வன்னி நிலமைகளை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இன்னொரு சாரார் நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகத்தினைச் சேதமாக்கினர். இச் செயல்களால் வெட்கமடைந்த நோர்வே அரசு சம்பவங்களுக்கு மன்னிப்புக் கோரியதுடன், புனரமைப்பை மேற்கொள்ளவதற்கான செலவினங்களை வழங்கவும் சம்மதித்தது.

அதேவேளை தற்போதுள்ள சூழலில் நோர்வேயின் பணிக்கு அங்கு இடமில்லை என இலங்கை அரசு கருதுவதால் சமாதான முயற்சிகளில் தாம் தொடர்ந்தும் அனுசரணையாளராக செயற்பட முடியாது என நோர்வே தூதுவர் அறிவித்தார்.

56

மக்கள் வெள்ளம் வெளியேற்றம்

2009ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இரவு புலிகளின் பாதுகாப்பு அரண்களை உடைத்து துப்பாக்கிப் பிரயோகம் அற்ற பகுதிக்குள் ராணுவம் நுழைந்தது.

இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்கள் அலை அலையாக வெளியேறி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றனர்.

அடுத்த 3 நாட்களின் பின்னர் சுமார் 103.000 மக்கள் 72 மணி நேரத்திற்குள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றிருப்பதாக வெளியறவு அமைச்சர் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்.

ஆனால் கடந்த காலத்தில் புலிகளின் பிடிக்குள் சுமார் 50,000 மக்கள் முதல் 60,000 வரை இருப்பதாக அரச தரப்பு அடிக்கடி குறைத்துக் கூறி வந்தது.

ஆனால் தற்போது அவ்வளவு பெரும் தொகையான மக்கள் வெளியேறிய சம்பவம் அவர்களின் செய்திகளைக் கேலிக்குரியதாக்கியது.

புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்ரர், தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோரும் அகதிகளாக ராணுவத்திடம் சரணடைந்த செய்தி அரசிற்கு மேலும் வெற்றிப் பெருமிதத்தை வழங்கியது.

அவர்களிடம் சரணடைந்தமைக்கான காரணங்களை வினவியபோது தப்பிச் சென்றமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியும், சிறுவர்களைப் பலவந்தமாக கடத்தியமையாலும் தாம் சரணடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மக்கள் பெரும் தொகையாக வெளியேறிய செய்திகளை கொழும்பு   ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தன. பதிலாக ராணுவம் மனிதாபிமான  உதவிகளை வழங்குவதாக கூறின.

ராணுவத்தின் தாக்குதலால் மரணமடைந்தோர் தொகையை புலிகள் தரப்பினர் மேலும் அதிகரித்துக் கூறினர். அரசினால் அதனை மறுக்கவும் முடியவில்லை.

ஏப்ரல் 19ம் 20ம் திகதிகளில் மட்டும் 121 பொதுமக்கள் மரணித்து 765பேர் காயமடைந்ததாக சுயாதீன செய்திகள் தெரிவித்தன.

ஏப்ரல் 19ம் திகதிய தாக்குதலின் போது ஏற்பட்ட மக்கள் மரணத் தொகை குறித்து எவ்வித கவலையுமின்றி ராணுவம் தாக்கியதாக நேரில் கண்ட சாட்சி தெரிவித்தார்.

அத்துடன் இறந்த பிணங்களைக் காட்டி தமது போரின் வெற்றியைப் பெருமிதப்படுத்தினர்.  பெருமளவு மக்கள் அங்கிருந்து வெளியேறிய போதிலும், அங்கு இன்னமும் சுமார் 50,000 மக்கள் சிக்கியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பவங்கள் குறித்துப் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ் எழுதுகையில் புலிகள் மக்களை வெளியேறாது தடுப்பது என்பது பாரிய படுகொலைக்கு வழி வகுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

எனவேதான்   மனித நேய உதவியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. பாரிய ரத்தக்களரி ஏற்படும்  என எச்சரித்திருந்தும் உலக நாடுகளால் அதனைத் தடுக்கவும் முடியவில்லை. தடுக்கும் விருப்பம் இருந்ததாகவும் தெரியவில்லை என எழுதியிருந்தார்.

இவ் ஆபத்துக் குறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே . நாராயணன், வெளியுறவுச் செயலர் சங்கர் மேனன் என்போரும் எச்சரித்திருந்தனர்.

இதன் காரணமாக ஏப்ரல் 27ம் திகதி தாக்குதல்களை நிறுத்துவதாக அரசு அறிவித்தது. சர்வதேச அழுத்தங்களால் பணிந்த அரசு இம் முடிவு போர் நிறுத்தம் என அர்த்தப்படாது எனவும், தாக்குதல்களுக்கான நோக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக கொள்ள வேண்டும் எனவும், கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்கள் போன்றன அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார விளக்கம் அளித்தார்.

ராணுவ பேச்சாளரின் விளக்கம் முடிவடைந்த அதே நாள் பிற்பகல் சரமாரியான குண்டுகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீசப்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் தெரிவித்தன.

2009ம் ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியில் அரச தரப்பினரால் பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்குண்ட மக்கள் மத்தியிலே கீழ்வரும் விபரங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டன.

…. துப்பாக்கிப் பிரயோகம் அற்ற பிரதேசத்திற்குள் உள்ள நீங்கள் துர் அதிர்ஸ்டவசமாக புலிகளின் பிணைக் கைதிகளாகி பாரிய துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதை நான் அறிவேன்.

தமது பாதுகாப்பிற்காக உங்களைக் கேடயமாக்கியதால் உங்கள் துன்பம் மேலும் நீடிக்கிறது. பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலையத்திற்குச் செல்லுமாறு ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். உங்கள் ஒவ்வொருவரினதும் பாதுகாப்பையும், நலன்களையும் உறுதிப்படுத்துவதற்கான சகல முயற்சிகளுக்கும் எனது அரசு மிக முன்னுரிமை வழங்கும் என உறுதியாக தெரிவிக்கிறேன்….

எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

87128308(French foreign minister, Bernard Kouchner visits the Kadirgamh camp for displaced people in Chettikulam, north Sri Lanka on April 29, 2009. Kouchner and British foreign minister David Miliband, who are in Sri Lanka for a one-day visit,..)

நோர்வையைப் புறம் தள்ள அரசு முயற்சி

ஏப்ரல் 24ம் திகதி கூட்டுத் தலைமை நாடுகளின் ராஜதந்திரப் பிரதிநிதிகளை வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம அழைத்திருந்தார்.

ஆனால் நோர்வே அழைக்கப்படவில்லை. இக் கூட்டத்தில் புலிகள் சரணடைவது பற்றியே பேசுவதாக இருந்தது. நோர்வே தூதுவர் ஏன் அழைக்கப்படவில்லை? என அமைச்சரிடம் வினவியபோது கூட்டுத் தலைமை நாடுகளுள் நோர்வே இருப்பதைத் தம்மால் இனிமேல் அங்கீகரிக்க முடியாது என்றார்.

அமைச்சரின் இப் பதிலை ஏற்க முடியாது எனத் தெரிவித்து ஏனைய பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அமெரிக்க தூதுவராலய அறிக்கையின்படி நோர்வேயின் துணையில்லாமல் புலிகள் சரணடைவது சாத்தியமில்லை. அரசின் நடவடிக்கைகள் பேச்சுவார்ததை மூலம் சரணடையும் முயற்சி சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது.

இச் சமயத்தில் அதாவது ஏப்ரல் 24ம் திகதி ஜோன் ஹோம்ஸ் இலங்கை வந்து இதர தூதுவர்களோடு பேச்சு நடத்தினார்.

தனது விஜயம் மனித நேயத்தை நோக்கிய போர் நிறுத்தம், அடுத்தது பேச்சுவார்த்தை மூலம் புலிகளைச் சரணடைய வைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்வது தனது இலக்கு எனத் தெரிவித்தார்.

ஆனால் மனித நேயம் சார்ந்த போர் நிறுத்த யோசனையை அரசு நிராகரித்தது. இரண்டாவதாக ஒழுங்கு வடிவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள நோர்வே முயற்சிப்பதின் சாத்தியங்களை சந்தேகங்களுடன் வெளியிட்டார்.

இச் சந்தர்ப்பத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த பாதுகாப்பு வலையத்திலிருந்த வைத்தியசாலையில் குண்டுகள் வீழ்ந்து பலர் மடிந்ததாக செய்திகள் வெளியாகின.

இதில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பலிலிருந்து பொதிகளை இறக்கிய தொழிலாளர்களும் மரணித்திருந்தனர். ஆனால் பாதகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல வழமை போல அவற்றினை மறுத்தார்.

வன்னி நிலமைகள் மோசமடைவதைக் கண்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் (David Miliband ), ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் பேர்னார்ட் கௌச்னர்  (Bernard Kouchner )  ஆகியோர் 24 மணி நேர விஜயத்தை மேற்கொண்டனர்.

அவர்கள் போர் நிறுத்தத்தினை வற்புறுத்திய போதிலும் ஜனாதிபதியும், கோதபயவும் அதனை நிராகரித்தனர். புலிகளின் முக்கியஸ்தர்கள் உயிருடன் அல்லது பிணமாக பிடிபடும் வரை அரசு போரை நிறுத்தப்போவதில்லை என்பது மேலும் உறுதியாகியது.

index4கே பி யும் போர் நிறுத்தத் திட்டமும்

நோர்வே உட்பட கூட்டுத் தலைமை நாடுகள் போர் நிறுத்தத்தில் புலிகளை ஈடுபடுத்தும் திட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டனர். எரிக் சோல்கெய்ம் இன் கருத்துப்படி சிக்கிய பொது மக்களைக் காப்பாற்றுவது, சரணடைய விரும்பிய போராளிகளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்துவது என்பனவே நோக்கமாக இருந்தது.

பாரிய கப்பல் ஒன்றினை வன்னிப் பகுதிக்கு அனுப்பி அதை நிறைவேற்றுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சர்வதேச மேற்பார்வையுடன்

பொதுமக்களைக் கொழும்பிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து விடுவிப்பது, புலிகளைச் சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை ஒப்படைப்பது, பெயர், புகைப்படம் போன்ற விபரங்கள் அரசின் தொந்தரவுகளிலிருந்து காப்பாற்றும் வகையில் பெறப்பட்டதும், பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்ந்த ஏனையோரை விடுதலை செய்வதும் நோக்கமாக இருந்தது.

புலிகளுடன் பேசுவதற்கான தொடர்பாளராக கே பி செயற்பட்டார். அப்போது புலிகள் கனவு உலகத்தில் சஞ்சரிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் 2012 இல் பத்திரிகையாளர் டி பி எஸ் இற்கு வழங்கிய செவ்வியில் புலிகள் ஒர் ஒழுங்கு முறையில் சரணடைவதாக ஏற்பாடாகியிருந்தது.

போர் நிறுத்தத்தினை மேற்கொள்வது, ஆயுதங்களை ஐ நா அதிகாரிகளிடம் கையளிப்பது, நோர்வேயின் அனுசரணையுடன் புலிகளும், அரசும் பேச்சுவார்த்தைகளை நடத்துவது, புலிகளின் மிக முக்கிய 25 முதல் 50 வரையிலான தலைவர்களையும், குடும்பத்தினரையும் வெளிநாட்டிற்கு அனுப்புவது தேவைப்படின் குறைந்த தரத்திலான போராளிகளுக்கு பொது மன்னிப்பு, நடுத்தர போராளிகளுக்கு சிறிய தண்டனை வழங்குதல் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இத் திட்டத்தை மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் தாம் பேசி ஏற்பாடு செய்ததாக கே பி கூறியிருந்தார். அத்துடன் மூன்று மேற்குலக நாடுகள் உயர்மட்ட தலைவர்களை மீட்க அமெரிக்க கடற்படைப் பிரிவை அனுப்பவும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இத் திட்டத்தினைப் பிரபாகரனை ஏற்றுக்கொள்ளச் செய்வதை கே பி பொறுப்பேற்றார்.

இதன் அடிப்படையில் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இச் செய்தி வெளியாகிய தருணத்தில் நோர்வே பாதகாப்பு பொலீசார் கே பியை நோர்வேயிற்கு அழைத்துச் செல்ல மலேசியத் தலைநகரான கோலாலம்பூருக்கு ஏற்கெனவே வந்திருந்தனர்.

ஓஸ்லோ சந்திப்பிற்கு முன்னதாகவே தாம் 16 பக்கங்கங்கள் அடங்கிய அறிக்கையின் விபரங்களை தொலைநகல் மூலமாக புலிகளுக்கு அனுப்பியதாக அந்த செவ்வியில் அவர் கூறியிருந்தார்.

ஆனால் அந்த அறிக்கையை தம்மால் ஏற்க முடியாது என பிரபாகரன் அவரிடம் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக எரிக் சோல்கெய்ம், கே பி ஆகியோருக்கிடையே கருத்து பேதங்கள் காணப்பட்ட போதிலும் அவ் அறிக்கையை பிரபாகரனே நிராகரித்தார் என்பதை இருவரும் எற்றுக்கொண்டனர்.

( அடுத்த வாரம் தொடரும்)

ஆனந்தபுரத்தில் நடந்த இறுதி சமர்!! : இரசாயனக் ஆயுங்களை பாவித்து புலிகளை கொன்று குவித்த இராணுவம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 50) -சிவலிங்கம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.