ஆனந்தபுரத்தில் நடந்த இறுதி சமர்!! : இரசாயனக் ஆயுங்களை பாவித்து புலிகளை கொன்று குவித்த இராணுவம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 50) -சிவலிங்கம்

0
747

போரில் சிக்குண்ட மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஐ நா அதிகாரிகளுக்கும், புலிகளுக்குமிடையே  தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றன.

ஐ நா உதவிச் செயலாளரான ஜோன் ஹோம்ஸ்  ( John Holmes) அவர்களுக்கும், கே பி இற்குமிடையே தொலைபேசி பரிமாறல்கள் இடம்பெற்றன.

இச் செய்தி உள்ளுர் ஊடகங்களிலே வெளியானதைத் தொடர்ந்து அப்போதைய ஜே வி பி இன் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ  நோர்வேயுடனான தொடர்புகளைத் துண்டிக்குமாறு அரசைக் கோரினார்.

ஐ நா வுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நோர்வே துணை புரிந்ததாக குற்றம் சாட்டினார்.

இதனால் இலங்கை  அரசு நோர்வே  தூதுவரை அழைத்து தமது கவலையை வெளியிட்டதுடன் அப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

14-nadesan1-300ஆனால் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக்  (Robert Blake) மேலும் ஒருபடி மேலே சென்று போரில் சிக்குண்ட மக்களை விடுவிக்குமாறும், அவ்வாறு   தடுத்து வைத்திருப்பது   சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு முரணானது என்பதை எடுத்துரைக்கவே அம் முயற்சி எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

இவற்றிற்கு மத்தியில் நோர்வே   தரப்பினர் நடேசனுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் விபரங்களை 2009ம் ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி தமிழ் நெற் என்ற இணையத் தளம் வெளியிட்டிருந்தது.

இத் தொலைபேசி உரையாடலில் வன்னி மக்களின் நிலை குறித்து சோல்கெய்ம் உரையாடியிருந்தார்.

அவ் உரையாடலின் போது நடேசன் போர் நிறுத்தத்தினையும், பேச்சுவார்த்தையையும் வற்புறுத்தினாரே தவிர ஆயுதங்களைக் கீழே போடுவது குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த இழுபறி நிலை  குறித்து பத்திரிகையாளர்  டி பி எஸ் ஜெயராஜ் எழுதுகையில் அங்கு சிக்குண்ட மக்கள் வெளியேறினால் நீரில்லாமல் மீன் வாழ முடியாதது போல அவர்கள் போராடுவதை நிறுத்த வேண்டும்.

போர் நிறுத்தம் ஏற்பட்டால் மக்கள் வெளியேறத் தேவையில்லை என்ற மனித நேயமற்ற புலிகளின் நிலைப்பாடே அழிவுக்குக் காரணமாக அமைந்தது.

புலிகளும், புலி ஆதரவு சக்திகளும் போர் நிறுத்தத்தைக் கோரிய போது சர்வதேச சமூகம் முதலில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து மக்களை வெளியேற அனுமதிக்கும்படி கோரியது.

ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் எனில் மக்களை வெளியேற்றத் தேவையில்லை என வாதித்தார்கள். இந்த இறுக்கமான நிலைப்பாடே ஒட்டுமொத்த அழிவை நோக்கி இட்டுச் சென்றது.
புலிகளின் தலைமையின் கோர மரணங்கள்
genocide-of-tamils-2009

போரின் உக்கிரம் அதிகரித்துச் சென்றபோது ஐ நா செயலாளர் பான் கி மூன் ஏப்ரல் 3ம் திகதி புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பதையும், சிறுவர்களைக் கடத்தி ஆயுதக் குழுவில் இணைப்பதையும் வன்மையாகக் கண்டித்ததோடு கனரக ஆயுதப் பாவனைக்கு எதிராக பாதிக்கப்பட்ட   மக்களைக் காப்பது அரசின் கடமை எனவும் வற்புறுத்தினார்.

இவ் அறிக்கை வெளி வந்த சமயத்தில் ராணுவம் புதுக்குடியிருப்பிற்கு அண்மையில் உள்ள ஆனந்தபுரத்தினைக் கைப்பற்ற சுற்றி வழைத்திருந்தது.

இதனை முறியடிக்க தீபன் தலைமையிலான படை அணி தயாரிப்பில் இறங்கியிருந்தது.

இறுதியில்  ராணுவத்தினால் முற்றாக சுற்றி  வழைக்கப்பட்டு   உணவு, நீர், மருந்து, ஆயுத உதவி என்பன தடுக்கப்பட்டு  விமானம், எறிகணை என கனரக ஆயுதங்களாலும், வெள்ளை பொஸ்பரஸ்  இரசாயனக் கலவைகளாலும்  அவர்களைக் கொன்று குவித்தார்கள்.

இக் கொடுமை நிறைந்த போரின் விபரங்கள் சில நாட்களில் வெளியாகியது.

சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவிலிருந்த 625 இற்கு மேற்பட்ட போராளிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுவே புலிகள் தரப்பில் ஏற்பட்ட பாரிய இழப்பு எனக் கருதப்படுகிறது. இப் போரில் 4 பெண் மூத்த போராளிகள் உட்பட 20 மூத்த போராளிகள்  மரணமடைந்தார்கள்.

கீர்த்தி, நாகேஷ், கிழக்கின் ஜெயந்தன் படைப் பிரிவின் முக்கிய போராளிகள், 80 களில் விமான  எதிர்ப்பு   ஏவுகணைகளைப் பயன்படுத்தும் பயிற்சிகளைப் பெற்றவரும், பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலருமாகிய கடாபி போன்றோரும் அப் போரில் இறந்தனர்.

இதுவே போரின் இறுதி முடிவைத் தீர்மானிக்கும் ஒன்றாக அமைந்ததாக அவதானிகள் கூறினர்.

இச் சம்பவம்  இடம்பெற்ற இரண்டாம் நாள் பிரித்தானிய பத்திரிகை ஒன்றில் சம்பந்தப்பட்டவர்கள் தீர்மானகரமான செயலில் உடனடியாக இறங்க வேண்டுமென ஐ நா உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் பிரித்தானிய பத்திரிகை ஒன்றில் கட்டுரை வரைந்திருந்தார்.

வட மாகாண கடற்கரை ஓரங்களில் ரத்த வெள்ளம் ஓடுவதற்கான ஆபத்துக்கள் நிறைய உள்ளதால் மனிதநேய அடிப்படையில் தொண்டர்களை அனுப்பி  150,000 மதல்  190,000 வரையான மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோரினார்.

இந்த ஆபத்தினை அவர் ஏற்கெனவே தெரிந்திருந்தார் என்பது உணரப்பட்டது. அவர் எதிர் பார்த்தது போலவே துப்பாக்கிச் சூடு அற்ற வலையம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் ஏப்ரல் 8ம் திகதி பால் மாவிற்காக வரிசையில் காத்திருந்த பெண்கள், சிறுவர்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 60 பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

இலங்கையின் புது வருட பிறப்பிற்கு முன்பதாக ஏப்ரல் 11ம் 12ம் திகதிகளான வார விடுமுறை தினத்தில் 48 மணி நேர போர் நிறுத்தத்தினை அனுசரிக்கப்ப் போவதாக மகிந்த அறிவித்தார்.

இவ் அறிவித்தலின் போது பாதுகாப்பு   வலையத்தை  நோக்கியோ அல்லது  அதனுள்ளிருந்தோ எதுவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. இத் தருணத்தில் சிக்குண்ட மக்களை புலிகள் விடுவித்தால் போர் நிறுத்தம் மேலும் நீடிக்கும் என பஸில் அறிவித்தார்.

தான் எதிர்பார்த்தவாறு நீடித்த போர் நிறுத்தம் ஏற்படவில்லை ஆயினும் வரவேற்றகத் தக்க முடிவு என பான் கி மூன் தெரிவித்தார்.

no_fire_zone_after.jpg.size_.custom.crop_.1086x627

ராஜதந்திர நகர்வுகள்

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட வேளையில் அமெரிக்க தூதுவர் பிளேக், வெளியுறவு அமைச்சர் போகொல்லாகமவுடன் தொடர்பு கொண்டு புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் சரணடைய விரும்புவதாக செய்திகள் நோர்வேயிற்கு கிடைத்துள்ளது.

அதனை அவர்கள் உங்களுடன் பகிர்ந்தார்களா? என வினவினார். அதற்குத் தாம் நோர்வே மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

அதே வேளையில் பிரச்சனைக்கு முடிவுகட்ட பாதுகாப்பு வலையங்களை நோக்கி ராணுவம் செல்வது சிக்குண்ட மக்களுக்கு மட்டுமல்ல, அரசிற்கும் பாதகமானது என றொபேர்ட் பிளேக் தெரிவித்தார்.

அத்துடன் பல உயிர்களைப் பாதுகாப்பதற்கும், புலிகள் சரணடைவதற்குமான பேச்சுவார்த்தை வாய்ப்புகளையும் அரசு தவற விட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் 48 மணி நேரபோர் நிறுத்தம் எவ்வாறு செல்கிறது? என்பதைப் பொறுத்துத் தீர்மானிப்போம் என அமைச்சரின் பதில் இருந்தது.

ஆனால் அவை எதுவும் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. ஏப்ரல் 12ம் திகதி நள்ளிரவுடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததும் வெடிச் சத்தங்கள் மீண்டும் தொடர்ந்தன.

நியூயோர்க் ஐ நா செயலகத்தில் உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் 48 மணிநேரம் உதவிகளை எடுத்துச் செல்லப் போதுமானதாக இருக்கவில்லை எனவும், ரத்தக்களரி தொடர்வதற்கான அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால் போர் நிறுத்தம் என்ற நாடகத்தை நடத்தி உலகத்தை ஏமாற்றாமல் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்து பேச்சவார்த்தைகளில் ஈடுபடுமாறு புலிகள் தெரிவித்தனர்.

piraba

ஆனால் ஆயுதங்களைக் கீழே போட்டால் மாத்திரமே நிரந்தர போர் நிறுத்தம் எனவும், பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு அளிப்பதாகவும் கோதபய அமெரிக்க தூதுவருக்குத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் 16-17ம் திகதிகளில் ஐ நா செயலாளரின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் போரில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மகிந்தவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டுத் தலைமை நாடுகளின் அதிகாரிகளைச் சந்தித்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு   அரச தரப்பினர்   ஆதரவு தர மறுப்பதாகவும், அவ்வாறு வழங்கினால் அந்த இடைவெளியில் சிறுவர்களையும், பொதுமக்களையும் ஆயுதப் பயிற்சியில் பலவந்தமாக ஈடுபடுத்த வாய்ப்பளிக்கும் எனக் கூறி எதிர்த்ததாகவும் கூறினார்.

இருப்பினும் ஐ நா அதிகாரிகளும், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் இணைந்து பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கண்ட மக்களை வெளியேற்றும் வழி வகைகளை ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

விஜய் நம்பியார் அவர்களின் வரவைக் கௌரவிக்கம் பொருட்டு அமைச்சர் போகொல்லாகம அளித்த விருந்துபசாரத்தின் போது அமெரிக்க தாதுவர் மிகவும் இறுக்கமாக சில வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளார்.

vijay_CIஐ நா சபையின் உயர் அதிகாரிகள் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக்கூடாது என மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு கூறுமானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு ஆக்கிரமிப்பாளரே பொறுப்புக் கூறவேண்டும் எனவும், நிச்சயமாக மிக அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.

Robert_Blakeதற்போது அதிகமான மக்கள் இறந்தமை குறித்து பல நாடுகள் கவலை அடைந்துள்ளன எனத் தெரிவித்த பிளேக் அவர்கள் இதே மாதிரியான ஒரு சம்பவம் ருவாண்டாவில் இடம்பெற்ற போது சர்வதேச சமூகம் அதனைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை.

தம்மை ராணுவத் தீர்வை நோக்கிச் செல்லவே மக்கள் தெரிவு செய்தார்கள் என இலங்கை அரசு கூறுமாயின் அவை சர்வதேச விமர்சனத்தை மேலும் அதிகரிக்கவும், அவற்றை நிவர்த்திப்பதற்கான முயற்சிகளை எடுக்கவும் தூண்டும்.

அவை சர்வதேச உதவிகளை இடை நிறுத்தவும், உலக வங்கி கடன்களுக்கான நிபந்தனைகளை அதிகரிக்கவும், போர்க் குற்றத்தினை சுமத்தவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டலாம் என எச்சரித்தார்.

இந் நிலமைகள் குறித்து எரிக் சொல்கெய்ம் தனது அனுபவங்களைப் பின்வருமாறு விபரிக்கிறார்.

… போராளிகளையும், மக்களையும் காப்பாற்றும் பொருட்டு போரை முறைப்படி முடித்து வைக்குமாறு புலிகளை பல்வேறு வழிகளில் கேட்டிருந்தோம்.

அவர்களுடன் தொடர்பு கொள்ள எமக்கு இரண்டு வழிகளே இருந்தன. அவை தொலைபேசி அடுத்தது புலித்தேவன், நடேசன் என்போராகும். இவர்களது தொடர்பகளும் மிகவும் நலிந்து கொண்டே சென்றன. அத்துடன் கே பி இன் தொடர்புகளும் இருந்தன.

வன்னியுடன் எமது தொடர்பு என்பது ஒரு கனவு போன்றது. எமது தகவல்கள் பிரபாகரனை எட்டினவா? என்பது குறித்து எமக்கு எதுவுமே தெரியாது.

அவர்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார்கள். தம்முடன் பேச வருமாறு கோரினார்கள். ஆனால் அது பிரபாகரனுடன் அல்ல. நடேசனுடன் மட்டுமே.

KP-Pathmanathanபுலிகள் கனவுலகத்தில் வாழ்வதாக கே பி கூறினார். உலகத்துடன் எதுவித தொடர்பும் அற்று அற்புதங்கள் நடக்குமென நம்புகிறார்கள்.

எதிர்வரும் இந்திய லோகசபை தேர்தலில் பி ஜே பி வெற்றி  பெறுவார்கள் எனவும், அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் எனவும் நம்பினர்.

அடுத்து புலம்பெயர் தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்கு பலமான அழுத்தங்களைக் கொடுத்து அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என நம்பினர்.

ஆனால் இது ஒன்றும் நிறைவேறாது என்பதை நாம் அறிந்திருந்தோம். எமது பார்வையை கே பி ஏற்றுக்கொண்டு பிரபாகரனின் எண்ணத்தை மாற்ற தாம் முயற்சிப்பதாக அவர் கூறினார்.

ஒழுங்கான முறையில் போரை முடிக்கும் எமது யோசனையை அவரும் ஏற்றார். ஆனால் அவரது செய்திகளும் பிரபாகரனைச் சென்றடைந்ததா? என்பதை அறிவது மிகவும் சிரமமாக இருந்தது…

என அவரது அனுபவம் பேசியது.

( மீண்டும் அடுத்த வாரம் )

-சிவலிங்கம்-

நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை? றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.