ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

0
471

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடியை செலுத்தத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன.

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அவர்கள் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தலா ரூ.10 கோடி அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது.

கர்நாடக விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க கோரியும், அவரது சொத்துக்களை விற்று அவருக்கு விதிக்கபட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரியும் கர்நாடக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.

இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதாவ் ராய் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்க உகந்தது இல்லை என்றும் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் செலுத்த வேண்டிய அபராதத்தை வசூலிக்க முடியாது என்றும் தெரிவித்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பதை பரிசீலிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த சீராய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.