குவியலாய் தங்க நகைகள் – சாக்குகளில் பணம்!! இந்தியப் படையினரிடம் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – 118)

0
713

யாழ் குடாநாடு இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாகின.

இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களிடம் பயமும், அதிருப்தியும் காணப்பட்டன. அதே சமயம் மக்கள் மத்தியில் ஒரு சாரார் இந்திய படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் செய்தனர்.

சில பகுதிகளில் இந்திப் படையினர் மக்களுடன் விரோதமில்லாமல் நடந்து கொண்டனர்.

புலிகள் தாக்கினால் மட்டுமே பதிலடியாக மூர்கத்தனமான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர். சாதாரண சமயங்களில் சாதுக்களாக நடந்து கொண்டனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் நிலை கொண்டிருந்த இந்தியப் படைப் பிரிவுகளுக்கும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் இடையே சுமுகமான உறவுகள் ஏற்படத் தொடங்கின.

தமது பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு அப் பகுதிகளில் உள்ளர்கள் பட்டப்பெயர்களையும் சூட்டியிருந்தனர்.

சத்யராஜ், அமிதாப்பச்சன், கமல், ரஜினி என்று நடிகர்களின் பெயர்களே பட்டப்பெயர்களாக சூட்டப்பட்டன.

பாடசாலைகள் இயங்கத் தொடங்கிய போது காவல் நிலைகளில் இருந்த படையினர் மாணவிகளுடன் சேட்டைகள் புரிந்தனர். கேலி செய்தனர்.

அதே நேரம் சில மாணவிகளுக்கும் காவல் நிலையங்களில் பணிபுரிந்த இந்தியப் படையினர் சிலருக்கும் இடையே நட்பும் ஏற்பட்டது. அந்த நட்பு மெல்ல மெல்ல வளர்ந்து காதலாக மாறிய சம்பவங்களும் இருக்கின்றன.

ஹிந்திச் சொற்களை புரிந்துகொண்டு இந்தியப் படையினருடன் நட்பாகி நன்றாக ஹிந்தி பேசப் பழகியவர்களும் பலர் இருந்தனர்.

பொதுமக்களுக்கும், இந்தியப் படையினருக்கும் இடையே நல்லுறவுகளும், நட்பான சூழலும் காணப்பட்ட போது புலிகள் எரிச்சலடைந்தனர்.

இப்படியேவிட்டால் இந்தியப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை மக்கள் விரும்பபோகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இந்தியப் படைக்கும்-மக்களுக்கும் பரஸ்பர உறவுகள் ஏற்பட்டல் தம்மை பற்றிய தகவல்களும் போய் சேர்ந்துவிடும். யார் தகவல் கொடுக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க முடியாது என்று புலிகள் சஞ்சலம் அடைந்தனர்.

அதனால் இந்தியப் படையினருடன் நட்பாக இருப்பவர்கள், சிரித்துப் பேசுபவர்கள், இந்தியப் படை முகாம்களுக்கு சென்று வருவோர் துரோகிகளாகக் கருதப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டனர்.

மனைவி கைது

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், நவாலி பகுதிகளில் நிலை கொண்டிருந்த இந்தியப் படையினருக்கு ஒரு தகவல் எட்டியது.
மிக முக்கியமான தகவல் அது.

புலிகள் இயக்க மானிப்பாய் பொறுப்பாளராக இருந்தவர் மயூரன்.

யாழ் குடாநாட்டின் இந்தியப் படையினர் வருகைக்கு முன்னர் புலிகள் பாரிய நிதி திரட்டலில் ஈடுபட்டிருந்தனர். மானிப்பாய் பகுதிகளிலும் பெருந்தொiகான பணமும், நகைகளும் போராட்ட நிதியாக திரட்டப்பட்டன.

திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதியை தலைமையிடம் ஒப்படைத்த மயூரன் மறு பகுதியை தன் பொறுப்பில் வைத்திருக்கிறார்.

இந்தியப் படையினர் மானிப்பாய், நவாலிப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் மயூரன் அங்கு எங்கோதான் பதுங்கியிருக்கிறார் என்று இந்தியப் படையினருக்கு தெரிய வந்தது.

மயூரனைச் சல்டை போட்டுத் தேடினார்கள்.

மயூரன் திருமணமானவர். அவரது மனைவி ஆணைக் கோட்டை உயரப்புலத்தைச் சேர்ந்தவர். அவரது வீட்டாரும் பெரும் பணக்காரர்கள்.

ஆணைக்கோட்டை உயரப்புலம் என்னும் இடத்திலுள்ள வீட்டில்தான் மயூரனின் மனைவி இருக்கிறார் என்பது தகவல்.

படையினர் விரைந்தனர்.

மயூரனின் மனைவி கைதானார்.

“மயூரனின் மனைவியை விடுதலைசெய்ய வேண்டுமானால், மயூரன் சரணடைய வேண்டும்” என்று கூறிவிட்டனர் இந்தியப் படையினர்.

pulikalllla

ஆயுதங்கள்- நகைகள்

மனைவி கைதுசெய்யப்பட முன்னர் மயூரன் ஒரு திட்டத்தோடு இருந்தார். தன் பொறுப்பில் இருந்த நகைகளையும், பணத்தையும் சுருட்டிக் கொண்டு வெளிநாடு செல்வதுதான் திட்டம்.

ஏற்கனவே சுருட்டல்களில் ஈடுபட்டவர் மயூரன். சிறுவர்களின் பொழுது போக்கிற்காக சிறுவர் பூங்காக்களை யாழ்குடாநாட்டின் பல இடங்களில் புலிகள் அமைத்திருந்தனர்.

மானிப்பாயில் உள்ள ஆனைக்கோட்டையில் உள்ள கூலாவடி என்னும் இடத்தில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் பெறும் தொகையை அமுக்கிக் கொண்டவர் மயூரன்.

இது தவிர மயூரன் தொடர்பாக பல புகார்கள் முன்னரே இருந்தன.

இந்நிலையில் இந்திய படையினர் யாழ்குடாநாட்டை கைப்பற்றியதும் கம்பி நீட்டத்திட்டமிட்டார் மயூரன். புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் யாழ்குடாநாட்டில் இல்லையென்பதால் மயூரனுக்கு கம்பி நீட்டும் தைரியம் வந்தது.

ஆனால் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டதால், வேறுவழியின்றி இந்தியப் படையினரிடம் சரணடைந்தார் மயூரன்.

கட கடவென்று மயூரன் சகல தகவல்களையும் கக்கினார். ஆயதங்கள், பணம், நகை புதைத்து வைத்திருந்த இடங்களையெல்லாம் காட்டிக் கொடுத்தார்.

நவாலியில் வீரசிங்கம் வளவு என்று இருக்கிறது. மிகப் பெரிய அந்த வளவுக்குள் பாழடைந்த ஒரு வீடும், தென்னை, மா, கொய்யா மரங்களும் இருந்தன.

அங்குதான் ஆயுதங்களை புதைத்து வைத்திருந்தனர்.

தோண்டத் தோண்ட ஆயதங்கள் இரண்டு லொறிகளில் அங்கிருந்த ஆயுதங்களையும், ஏனைய உபகரணங்களையும் ஏற்றிச் சென்றனர்.

மயூரன் வசம் இருந்த பணமும், நகைகளும் வேறொரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

சாக்கு சாக்குகளாக ரூபாய் நோட்டுக்கள், பெட்டி பெட்டியாக தங்க நகை குவியல்கள் எல்லாமுமாக அப்போதைய பெறுமதியே பல இலட்சங்கள் தேறும். இப்போது என்றால் குறைந்நது ஒரு கோடியாவது தேறும்.

தமக்குத் தேவையான தகவல் தந்தால் விடுதலை செய்வதாக மயூரனுக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தனர் இந்தியப் படை அதிகாரிகள்.

அதன்படி புலிகளிடம் மாட்டினால் அதோ கதிதான் என்று பயந்து கொழும்பிற்கு தப்பி வந்தார். கொழும்பு பம்பலபிட்டியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். பின்னர் கனடாவுக்குப் பறந்து சென்றார். தற்போது கனடா பிரஜையாக இருக்கிறார்.

மானிப்பாயில் கைது செய்யப்பட்ட புலிகள் உறுப்பினர்களில் முக்கியமான மற்றொருவர் ஐயர். சுதுமலையைச் சேர்ந்தவர். மயூரனின் பொறுப்பின் கீழ் செயற்பட்டவர்.

இந்தியப் படையினரிடம் மாட்டிய ஐயர் தமக்குத் தெரிந்த இயக்க உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தையும் ஒப்புவித்தார்.

மானிப்பாயில் உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் அனைவரது விபரங்களும் ஐயருக்கு அத்துப்படி.

ஐயர் கொடுத்த விபரங்கள் மூலமாக புலிகள் இயக்க உறுப்பினர்கள் மட்டுமன்றி, மானிப்பாயில் இருந்த புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

indiaaas
கப்டன் புலி

மானிப்பாய் – நவாலிப் பகுதியில் இந்தியப் படையினரை எதிர்த்து புலிகள் இயக்க கீழ் மட்ட உறுப்பினர்கள் போரிட்டனர்.

இந்திய படையினரின் சுற்றி வளைப்பில் சிக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் மானிப்பாயில் சயனைட் உட்கொண்டு பலியானார்கள். நவாலியில் இந்திய படையினரின் ஒரு ரோந்துப் பிரிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

இந்திய படையிருக்கும் ஊரிலுள்ள நாய்களுக்கும் எட்டாப் பொருத்தம். இரவில் அல்லது அதிகாலையில் இந்தியப் படையினர் பதுங்கி நடந்து செல்வர்.

உடனே நாய்கள் குலைக்கத் தொடங்கி விடும். எங்காவது புலிகள் தூங்கிக்கொண்டிருந்தால் கூட நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டு எழுந்து தப்பிச் சென்று விடுவர்.

அதிலும் வேடிக்கை என்னவென்றால் புலிகளைக் கண்டால் நாய்கள் குலைக்காமல் இருந்து விடுவதுமுண்டு. இந்தியப் படையினரைக் கண்டால் நிச்சயமாக குரைக்கத் தொடங்கி விடும்.

அதனால் இந்தியப் படையினருக்கு நாய்கள் மீதும் எரிச்சல்தான்.

நவாலியிலும் அப்படித்தான் நடந்தது. அதிகாலையில் நோந்து நடவடிக்கைக்காக சென்றகொண்டிருந்தனர் இந்தியப் படையினர்.

நாய்கள் விடாமல் குரைக்கத் தொடங்கின. பதுங்கியிருந்த புலிகள் உஷாராகினர்.

வளவு ஒன்றுக்குள் பதுங்கியிருந்து இந்திய ரோந்துப் பிரிவு மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர்.

z_p-07-IPKFஎதிர்பாராத திடீர் தாக்குதல்

இந்தியப் படை தரப்பில் கப்டன் சிவசாமியும், மேலும் படையினரும் கொல்லப்பட்டனர்.

புலிகள் தாக்கிவிட்டு வளவுகள் ஊடாகப் பாய்ந்து சென்றுவிட்டனர்.

தமது கப்டன் பலியானதால் ஆத்திரம் கொண்ட படைவீரர்கள் புலிகள் பதுங்கியிருந்து தாக்கிய வளவுக்குள் இருந்த வீட்டுக்குள் புகுந்தனர்.

அந்த வீட்டுக்குள் இருந்த 53 வயதான ஒரு பெண்மனியை இந்தியப் படையினரின் துப்பாக்கிகள் சல்லடை போட்டன.

ஆசிரியர் பலி

இப்படித்தான் இன்னொரு சம்பவம். யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் இராணுவ காவலரண் ஒன்று இருந்தது. புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைக்குண்டொன்றை அக் காவலரண் மீது வீசி விட்டு ஓடிவிட்டார்.

கைகுண்டு வீச்சில் இராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். உடனே அவர்களது சகாக்கள் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

எதிரில் வந்தவர்கள், நின்றவர்கள் எல்லோர் மீதும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கபட்டன.

துப்பாக்கி சூடு பட்டு விழுந்து கிடந்தவர்களில் இருவர் கைகுழுக்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர்.

அவர்களில் ஒருவர் பெயர் ஜேம்ஸ் அருமை நாயகம். மற்றவர் அந்தோனிப்பிள்ளை புருனோ கிறிஸ்டி.

சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியரான ஜேம்ஸ் அருமை நாயகத்தின் மாணவன்தான் புருனோ கிறிஸ்டி. பாஷையூரைச் சேர்ந்தவர்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்து திறமை சித்தி அடைந்த புருனோ கிறிஸ்டி தனது ஆசிரியரைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கச் சென்றிருந்தார்.

தன் மாணவன் திறமைச் சித்தி அடைந்தான் என அறிந்து வியந்த ஆசிரியர் ஜேம்ஸ் அருமை நாயகம் உச்சிகுளிர்ந்தார். மாணவனுக்கு கைலாகு கொடுத்து பாராட்டினார். அப்போதுதான் சூடு விழுந்தது.

ஆசிரியரும் மாணவனும் அப்படியே பிணமாக விழுந்தனர். அருகில் நின்ற ஆசிரியரின் மனைவி படுத்துக் கொண்டதால் உயிர் தப்பினார்.
கிட்டதட்ட பத்துப்பேர் இச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

எவ்வாறுதான் பொதுமக்களுடன் நல்லுறவுடன் நடந்து கொள்ள முற்பட்டாலும்கூட, தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தமிழ் மக்கள் யாவரையுமே எதிரிகளாகவே நினைத்துச் செயற்பட்டது இந்தியப் படை.

புலிகள் தாக்கியதால்தானே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது ஏற்கமுடியாத வாதமாகும்.

வரிந்து கட்டி விதண்டாவாதம் புரிவதற்காக முன்வைக்கப்படும் வாதமாக அது அமையலாமே தவிர, இந்தியப் படையினரின் கட்டுப்பாடற்ற நடவடிக்ககையை நியாயப்படுத்த முடியாது.

கைதுகள்

புலிகள் இயக்கத்தினருக்கு உணவு சமைத்துக் கொடுத்தவர்கள், உதவி செய்வர்கள், வீடு கொடுத்தவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டனர்.

பல பெண்களும் அவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். கெட்ட வார்த்தைகளால் தூஷிக்கப்பட்டனர்.

புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் அவர்களை இணைத்து தரக்குறைவான கேள்விகளும் கேட்கப்பட்டன.

கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட ஆண்கள் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

புலிகள் என்றால் உடல் ரீதியாக நல்ல பலசாலிகளாக இருப்பார்கள். பார்வைக்கு முரட்டுதனமாக இருப்பார்கள். பெரிய மீசை வைத்திருப்பார்கள் என்றெல்லாம் இந்தியப் படையினர் தமது விருப்பப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டனர்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அப்போது அடர்த்தியான மீசை வளர்த்திருந்தார். புலிகளின் முக்கிய தளபதிகளும் தமது தலைவர் போல மீசை வளர்த்திருந்தனர்.

புலிகளுடன் போர் ஆரம்பமான பின்னர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இந்தியப் படையினருக்கு பிரபாகரனையோ, ஏனைய புலிகள் இயக்க முக்கிய பிரமுகர்களையோ நேரில் கானும் சந்தர்ப்பம் இருக்கவில்லை.

புகைப்படங்களில் பார்த்திருப்பார்கள். அதனை வைத்து அவர்கள் மனதில் உருவான சித்திரம்தான் கட்டுமஸ்தான இளைஞர்கள் சிலரை அவர்கள் எங்கு கைது செயப்பட்டனரோ அப்பகுதி பொறுப்hளராகவே குற்றம் சாட்டிய வேடிக்கைகளும் நடந்துள்ளன.

z_p-07-IPKF
தொடர் பாலியல் வல்லறவு

கைதுகள், படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறு புறம் அவற்றின் தாக்கத்தால் மன நோய்களும் ஏற்படத் தொடங்கின.

மன நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த இளம் பெண்னை ஆஸ்பத்திரியில் கடமையில் இருந்த இந்தியப் படையினர் தாதிமார் உடைமாற்றும் அறைக்கு கொண்டு சென்றனர்.

இங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். தொடர்ந்து நான்கு இரவுகள் இவ்வாறு பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது.
பினனர் அப்பெண் காங்கேசன்துறை தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் பாலியல் பலாத்காரம் தொடர்ந்தது.

பனையேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது போல தொடர் துன்பங்கள் மக்களை ஆட்டிப் படைத்தன.

(தொடர்ந்து வரும்)

எழுதுவது அற்புதன்-
தொகுப்பு: கி.பாஸ்கரன்

What is LTTE?

பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் தகவல்!! இந்தியப் படையினர் முற்றுகை!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-116)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.