2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?

0
38915

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பொதுவாக சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்பன சோதிடத்தில் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

இதன்படி, நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவரான சனீஸ்வர பகவானின் இடப்பெயர்ச்சியால் ஒவ்வொரு இராசிக்கும் நிலைமை எப்படி சாதகமா – பாதகமா என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்கு இனி நல்ல காலம் தான். அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி உங்களுக்கு சனி பகவான் இராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்ந்து அதிர்ஷ்டத்தை வழங்க போகிறார்.

எனவே, இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் மறைந்துவிடும். உங்கள் ராசி/லக்கினத்திற்கு 10,11-க்குரிய சனி பகவான், 9ஆம் இடத்தில் இருப்பதால் தொழில் சிறப்பாக அமையும்.

பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் மற்றும் கற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த மன உளைச்சல், அலைச்சல் தீரும்.

வழக்கில் வெற்றி தரும். இனி நல்ல முன்னேற்றம் வரும். 09இல் சஞ்சரிக்கும் சனி பகவான்11ஆம் இடத்தை பார்வை செய்வதால், வெளி நாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும், 6ஆம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும்.

ஆனால் கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் செலுத்துவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து கிடைக்க வழி செய்வார்.

பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு இது அஷ்டம சனி. பயப்பட வேண்டாம். ரிஷபம் இராசிக்கு சனி யோககாரகர்.

அஷ்டம சனியாக வந்தாலும் கெடுக்க மாட்டார். ரிஷபம் சனியின் 2ஆம் இடத்து பார்வை குடும்பத்தில் இருந்த குழப்பங்களை தீர்க்க உதவும். திருமணம் நடக்கும்.

குழந்தை பாக்கியம் உண்டு. மேலும் யோக காரகர் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும்.

புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8ஆம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் ஆரம்பிக்கலாம். 7ஆம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நலம் தரும் என நம்பலாம்.

பரிகாரம்:
சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்றுங்கள்.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்த சனி பகவான், இனி உங்கள் ராசி/லக்கினத்திற்கு 7ஆம் இடத்திற்கு வருகிறார்.

உங்கள் இராசிக்கு 8,9-க்குரிய சனி, 7ல் வந்திருப்பது நன்மையே தரும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு.

கடன்கள் தீர்ந்து விடும். புதிய வாகனம் வாங்கலபம். ஆனாலும், ஜென்ம இராசியை சனி பார்ப்பதால் அலைச்சல் அதிகரிக்கும்.

பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாள் தேவைகள் நிறைவேறும்.மனைவியால் நன்மை. பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் விலகும் காலம் இது.

பரிகாரம்:
அன்னதானம் செய்யுங்கள். திங்கள்கிழமை கிழமைகளில் சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

கடகம்
கடக இராசிக்கு லக்கினத்திற்கு 6ஆம் இடத்திற்கு சனி பகவான் வருகிறார். இனி நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்.

திட்டங்கள் அத்தனையும் வெற்றிபெறும். 6ஆம் இடத்தில் அமர்ந்த சனி 9ஆம் இடத்தையும், 12ஆம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் விலகி விடும்.

வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3ஆம் இடத்தை பார்வை செய்வதால்,புதிய தொழில் பெரிய அளவில் அமையும்.

வெளிநாட்டு பயணம் உண்டு. 6ஆம் இடத்து சனி பகவான் உற்சாகம் தருவார். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி.

வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 7,8-க்குரிய சனி 6ஆம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு யோகம் தான்.

பரிகாரம்:
ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை பிராத்தியுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு அர்தாஷ்டம சனி விலகி விட்டது. உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சம திரிகோண ஸ்தானமான 5ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார்.

இனி பிரச்னைகள் தீர்ந்து விடும். உங்கள் திட்டம் எல்லாமே வெற்றியாக முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் தீர்ந்து விடும்.

இதுவரை சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் இனி இல்லை. நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

பஞ்சம திரிகோண ஸ்தான சனி, வேலை, தொழில், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற எல்லாவிதமான சுப மங்கல விஷேசங்கள் அத்தனையும் தரும். உங்களுக்கு இனி வாழ்க்கை இனிக்கும்.

பரிகாரம்:
வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.சனிக்கிழமையில் நீல நிற வஸ்திரத்தை தானம் செய்யுங்கள்.

கன்னி
கன்னிக்கு சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 4ஆம் இடத்தில் அமர்ந்து, அர்த்தாஷ்டம சனியாகிவிட்டார்.

ஆனாலும் நீங்கள் அதற்காக பயப்பட வேண்டாம். உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி திரிகோணாதிபதி கேந்திரமான 4ஆம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டார்.

உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் சனி பகவான் பார்வை செய்வதால், நோய்நொடிகள் கடன் பிரச்சினை அத்தனையும் நிவர்த்தி ஆகும். இனி கடனை தீர்க்கும் காலம். புதிய வேலையில் அமர்ந்து விடுவீர்கள்.

தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். இதை சனி பகவான் நிறைவாகவே அருள்வார்.

பரிகாரம்:
சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள்.பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

 

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று வியாழக்கிழமை  ( 26.01.2017 )  இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

துலாம் 

துலா ராசிக்கு இதுவரை பாத சனியில் இருந்த பாதிப்பு நீங்கி இனி நல்லது நடக்கும் காலம். சனிபகவான் உங்கள் ராசி/லக்கினத்திற்கு 3ஆம் இடத்திற்கு வந்துவிட்டார்.

பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். சொந்த வீடுகட்டி புது வீட்டில் குடிபோக வாய்ப்பு. சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது.

குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கியில் கடன் உதவி கிடைக்கும்.

பேச்சில் நிதானம் தேவை. உங்கள் மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12ஆம் இடத்தை சனி பார்வை செய்வதால், செலவுகள் வரத்தான் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், இனி யோக வாழ்க்கைதான்.

பரிகாரம்:
கணபதியை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் 

விருச்சிக ராசிக்கு இதுவரை  ஜென்ம ராசி/லக்கினத்தில் இருந்த சனி பகவான் உங்களை விட்டு விலகி விட்டார். இனி வாழ்வில் சுமை இல்லை.

சனி 2ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு பணம் வரும்.  சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு.

பழைய  புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும்.

9ஆம் இடத்திற்கு 12ஆம் இடமான 8ஆம் இடத்திற்கு சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்கள் சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் நிலை வருவதால் நன்மையே நடக்கும்.

பரிகாரம்:
சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு  சென்று வணங்குங்கள்.
தனுசு 

தனுசு ராசிக்கு சனிபகவான்  ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டார். ஏற்கனவே ஏழரை சனி, தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம்.

சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால், கெடுதல் செய்ய மாட்டார் என நம்பலாம். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான்.

திருமணம் நடைபெறும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6ஆம் இடத்தை பார்வை செய்வதால்  அவசரம் வேண்டாம். புது வாகனம் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும்.  உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காலம் உங்கள் வசம்.


பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீ அனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
மகரம் 

மகர சாசிக்க  ஏழரை சனி ஆனால் பயப்படவேண்டாம் உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் கவனம் தேவை.பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும்.  மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும்.

12ஆம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் பிரச்சினையில்லை இந்த ஏழரை உங்களுக்கு வளம் தரும்.


பரிகாரம்:
சனிக்கிழமையில் சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள்.  வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
கும்பம் 

கும்ப ராசிக்கு லாப சனியாக உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 11ஆம் இடத்திற்கு வந்துவிட்டார் சனிபகவான். இனியெல்லாம் நல்லதுதான்.

ஜென்ம இராசியையும், பஞ்சமதிரிகோணத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள்.

உங்கள் ராசி/லக்கினத்திற்கு ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள் அத்தனையும் நீங்கி. திருமணம் கைக்கூடும்.

உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும் வெற்றி கிடைக்கும்.  கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும்.

தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை.  சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். லாப சனி உங்களுக்கு யோகம் தரும்.

பரிகாரம்:

சிவனுக்கு திங்கள்கிழமைகளில் வில்வ இலை சமர்ப்பியுங்கள்.  ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
மீனம் 

மீன ராசிக்கு சனி பகவான்  இராசி/லக்கினத்திற்க்கு 10ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகவே   லாபாதிபதி 10இல் இருப்பது நன்மை. விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும்.

மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும்.

குழந்தை பாக்கியம் ஏற்படும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். வீண் பேச்சை தவிர்க்கவும்.

10ஆம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருக்கும் சனிபகவான், உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.

பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயர்  வணங்கி பாடல்களை பாடுங்கள் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள்.

 திருமணத் தடைக்கு ‘செவ்வாய் தோஷம்’ காரணமா?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.