மைத்திரியின் இரண்டு வருடமும் தமிழ் மக்களும்! -நரேன் (கட்டுரை)

0
768

வெற்றிவாதத்தை முன்வைத்து சர்வதிகார ஆட்சியின் மூலம் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு குழு செயற்பட்டு வந்தது.

அந்தக் குழுவிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையுடன் மற்றொரு குழு செயற்பட்டது. தொடர்ந்தும் தோல்வியைத் தழுவி வந்த ஒரு கட்சி தனது கட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் முனைப்பு காட்டியது.

சர்வதேச சமூகம் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நாட்டில் நிலவிய தேசிய இனப்பிரச்சனையை தீர்க்க முற்படாமல் முன்னைய அரசாங்கம் அறிவித்து வந்த பயங்கரவாதம் என்ற சொல்லை நம்பி ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலை அரசாங்கத்துடன் இணைந்து நசுக்குவதற்கு உடந்தையாக இருந்தது.

முன்னைய அரசாங்கம் சர்வதேச சமூகம் அறிவித்த அல்லது விரும்பிய முறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதன் விளைவாக இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்தநிலமையானது மேற்சொன்ன இரண்டு தரப்பினருக்கும் ஒரு சாதமான சூழலை உருவாக்கியது.

இதன்காரணமாக ஆட்சிமாற்றத்தை விரும்பிய சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் நிலைதடுமாறியிருந்த இரண்டு தரப்பினரும் தங்களை நிறுத்திக் கொள்வதற்காக கைகோர்த்துக் கொண்டனர்.

ஒவ்வொரு நேரமும் உள்நாட்டில் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நம்பியிருந்த தமிழ் தரப்பு இந்த முறையும் அந்த ஆட்சி மாற்றம் பாரிய விடிவை கொண்டு வந்து விடும் என்று நம்பியிருந்தது.

இதற்கு பிரதான இரண்டு கட்சிகளுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் செயற்பட்டமையும் ஒரு காரணமாகும். முன்னைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பதற்காக தமிழ் தேசிய இனப்பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்ட சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் மதிப்பைப் பெற்றிருந்தது.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் நாட்டாற்றில் விடப்பட்ட தமக்கு ஒரு ஆறுதலாக சர்வதேச சமூகத்தின் ஆதரவு அமைந்திருப்பதாக தமிழ் மக்கள் நம்பினர்.

எவ்வாறு முன்னைய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளித்ததோ அதேபாணியில் எதிரும் புதிருமான இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவளித்தது.

இதற்கு தம்மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழ் தரப்பையும் ஆதரவளிக்கச் செய்தது. முற்று முழுதாக சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கூட்டனியானது அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உள்நாட்டில் ஜனநாயக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்த அங்கீகாரம் கிடைத்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால முன்னேற்றங்களை கணக்கில் எடுக்கும் போது அது முற்றுமுழுதாக முன்னைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மூடிமறைத்து கடந்த அரசாங்கத்தையும், அந்த அரசாங்கத்தின் ஆணைகளை நிறைவேற்றியவர்களையும் காப்பாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றது.

சர்வதேச சமூகமும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது.

10872343_10204739813429625_8705604_n

இந்த நிலையில், தமிழ் தரப்பிற்கு இந்த இரண்டு வருட ஆட்சியில் கிடைத்த நன்மைகளை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.

இதுவரை காலமும் இந்த நாட்டில் உருவான புதிய அரசியல் யாப்புக்கள் மற்றும் திருத்தங்கள் அனைத்துமே ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் தேர்தலில் தோல்வியை தழுவிய மற்றொரு பிரதான கட்சியின் இருப்பை ஆட்டம் காண செய்வதையும், அவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது.

அதேநேரத்தில் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதில் அனைவரது அரசியல் யாப்பும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்தன.

இன்னும் சொல்லப்போனால் ஒன்றை மற்றொன்று விஞ்சுவதை நோக்கமாக கொண்டிருந்தது. மாறி வந்திருக்கின்ற இலங்கையின் அரசியல் சூழலில் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கம் குறித்து தற்போது பரவலாக பேசப்படுகிறது.

இந்த புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் தேசிய இனப்பிரச்சனை உள்ளிட்ட நாட்டின் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் புதிய ஆட்சியாளர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதற்கு ஒரு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டு அந்த குழுவின் கீழ் ஆறு உபகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் அங்கத்தவராகவுள்ளனர். அந்தக் குழுக்களின் அறிக்கையும் தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதும் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சுயாட்சி அலகை உருவாக்குவதே இலட்சியம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தது.

இதனையே தமிழ் மக்கள் பேரவையும் அரசியல் யாப்பில் இடம்பெறுவதற்கான யோசனையாக கூட்டமைப்பின் தலைமையிடமும், அரசாங்கத்திடமும் கையளித்திருந்தது.

இந்த விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவரோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரோ எதுவும் வாய்திறக்கவில்லை.

அத்துடன் நில்லாது இராஜதந்திர ரீதியில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவைகளை வெளியில் சொல்ல முடியாது. யாரும் குழப்பங்களை விளைவிக்க வேண்டாம் என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

sambandan_240816மறுபுறத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை எதிர்க்கவில்லை என்றும் வடக்கு, கிழக்கு இணைப்பை கோரவில்லை என்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் சிறப்பாக அரசாங்கத்தின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு இவர்களிடம் இருந்து எந்தகருத்தும் வெளியாகவில்லை. இது தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அவ்வப்போது ஒற்றையாட்சியை ஏற்கமாட்டோம், எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று வெளியில் சொன்னாலும் அதற்கான செயற்பாடுகள் குறித்தும், மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பங்காளிக்கட்சிகளுடனோ அல்லது இரண்டு மாகாண சபை உறுப்பினர்களுடனோ, அல்லது பாராளுமன்ற குழுக் கூட்டத்திலோ விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

தலைவர்களின் மூடிமறைக்கும் செயற்பாடுகளுக்கு இராஜதந்திரப் போர்வை போர்த்தப்படுகிறது.

Sumanthiran-MPகூட்டமைப்பினுடைய அனைத்து விடயங்களையும் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், வெளிவிவகார செயலாளருமே மேற்கொள்வதன் காரணமாக கூட்டமைப்பின் வெளிப்படை தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் சில நேரங்களில் அவர்கள் எடுக்கின்ற நல்ல முடிவுகள் கூட சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறது. மக்கள் தனிப்பட்ட தமிழரசுக் கட்சிக்காக வாக்களிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

கூட்டமைப்பின் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் கட்டிக் காப்பதற்கு அந்தக் கட்சி முன்வரவேண்டும்.

தமிழ் தரப்பு மேற்கொண்ட நல்லிணக்க செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எத்தகைய பலாபலன்களைக் கொடுத்திருக்கின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கடந்தகால மஹிந்த அரசாங்கம் 2009க்கு பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்களை ஒரு பணயப்பொருளாகவே வைத்திருந்தது.

இருந்தபோதிலும் கூட தமிழ் மக்கள் அந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சவில்லை. தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இயல்பாகவே கிடைத்திருக்க வேண்டிய அவர்களது காணிகளை விடுவித்திருக்க வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் ரீதியில் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

போர்க் கைதிகளாகவும், ஏனைய வழிமுறைகளிலும் அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையாவது தெரிவித்திருக்க வேண்டும்.

புதிது புதுதாக தமிழ் பிரதேசங்களில் முளைக்கும் புத்தர் சிலைகள் மற்றும் தமிழர் நிலத்தில் திணிக்கப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

பிற மதங்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இவைகள் அனைத்தும் நடைபெறாமல் இருப்பதுடன், நெருக்கடி நேரங்களில் மட்டுமே இது குறித்து பேசப்படுகிறது.

உதாரணமாக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதவுரிமை ஆணையக மாநாட்டை ஒட்டியும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிறுத்தியுமே கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் கடந்த அரசாங்கத்pதைப் போன்றே இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருப்பதை அறிய முடிகிறது.

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் இல்லாத நிலையில் கூட்டமைப்பின் தலைவரும் இதே பாணியையே கடைப்பிடிக்கிறார்.

தமிழ் தரப்பு இதில் எங்கு வேறுபடுகிறது என்றால் ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்கமாட்டோம். எங்கள் மக்கள் அளித்த ஆணைக்கு எதிராக செயற்பட மாட்டோம் என்று மேடைகளில் பேசுவதில் மட்டுமே இவர்கள் வேறுபடுகின்றனர்.

தமிழ் மக்களின் ஆணையின் மூலம் கிடைத்த எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கொண்டு அரசாங்கத்திற்கு நேரடியாகவும், சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் உரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பலவற்றை தீர்த்திருக்க முடியும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

ஆக இந்த இரண்டு வருடங்களும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலவு காத்த கிளி கதையாகவே இருக்கிறது. 2017 இல் இவைகளுக்கு விடை கிடைக்குமா…? தமிழர் வாழ்வில் சுவீட்சம் ஏற்படுமா..?

-நரேன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.