ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுவது ஏன்?

0
314

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு… தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ.பி.எஸ். அ.திமு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமைதான் என்று எழுதப்படாத கட்சி விதிப்படி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, வெகுவிரைவில் முதலமைச்சராகப் பதவியேற்பார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘‘சசிகலா, முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அந்த நாள்… எப்போது என்பது இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத பட்சத்தில்… முழு பெளர்ணமி நாளான ஜனவரி 12-ம் தேதியோ அல்லது எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதியோ பதவியேற்கலாம்’’ என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

சசிகலா தரப்புக்குச் சந்தேகம்!

‘சசிகலா முதல்வராகிறார்’ என்ற தகவல் அ.தி.மு.க-வினருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தாலும், கடந்த சில நாட்களாகவே அதில் பாதியளவுகூட, சசிகலா தரப்பு மகிழ்ச்சியாக இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

மகிழ்ச்சி குறைவுக்கு என்ன காரணம்… என்று கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘ஜெயலலிதா, இறந்த சில மணி நேரங்களிலேயே ஓ.பி.எஸ் முதல்வரானதுபோல, அடுத்த சில நாட்களிலேயே சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்க வேண்டும்.

அது, காலதாமதம் ஆனதால்தான் சசிகலாவுக்கு இப்போது பிரச்னையே ஏற்பட்டிருக்கிறது.

முதல்வரான ஓ.பி.எஸ்ஸின் அணுகுமுறை, கடந்த சில நாட்களாகத் தலைகீழாக மாறிவிட்டதுபோல சசிகலா தரப்புக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

கோட்டையைப் பொறுத்தவரையில் ‘ஏ’, ‘பி’ என இரண்டு செக்‌ஷன்கள்தான் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பவை. ‘பி’ செக்‌ஷன் என்பது, இணை மற்றும் துணைச் செயலாளர்களைக் கொண்டவை.

‘ஏ’ செக்‌ஷன் என்பது, சீனியர் அரசுச் செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டவை.

‘ஏ’ செக்‌ஷனில் இருந்துதான் முக்கியமான கோப்புகள் முதல்வர் அலுவலகத்துக்கு நகரும்.

அதேபோல், முதல்வர் அலுவலகத்துக் கோப்புகளும் நேரடியாக இங்குதான் வரும். மந்திரி சபையில் புதிய மந்திரி சேர்க்கை மற்றும் நீக்கம் குறித்து முதல்வரின் உத்தரவு முதலில் இங்குதான் வரும்.

முதல்வரின் உத்தரவுக்கேற்ப புதிய மந்திரிகள் குறித்த விவரம் இங்கிருந்துதான் ‘நோட்’ போட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும்.

முதல்வரின் உத்தரவுப்படி கவர்னர் மாளிகைக்கும் அதன் இன்னொரு பிரதி அனுப்பிவைக்கப்படும்.

‘ஏ’ செக்‌ஷன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த செக்‌ஷனில் உள்ள அரசு அதிகாரிகளுடன் முதல்வர் கலந்து ஆலோசிப்பது என்பதும் அதேபோல முக்கியத்துவம் வாய்ந்தது.

secretariate_600_13264_Ne_07337

ஓ.பி.எஸ்ஸா, இப்படிச் செய்கிறார்?

சாதாரணமாக கூட்டமுடியாத மீட்டிங் இது என்பது சசிகலாவுக்கு நன்கு தெரியும்.

ஓ.பி.எஸ்ஸுக்கு கார்டனில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம், ‘அய்யா… ஏ செக்‌ஷன் ஆபீஸ் ரிவ்யூ மீட்டிங்கில் இருக்கிறார்’ என்ற தகவலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து சொல்கிறார்கள்.

பலமுறை இப்படி முதல்வர் அலுவலகத்தில் இருந்து கார்டனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்’.

இவையனைத்தும், ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா அல்லது தனக்கென்று ஒரு செல்வாக்கை, ஏதாவதொரு ரூட்டில் போட்டுக்கொண்டு இருக்கிறாரா என்ற ஐயம் சசிகலா தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

‘ஒவ்வொருநாளும் மாலை 7 மணியளவில் கார்டனுக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாத குறையாக ஆஜராகிவிடும் ஓ.பி.எஸ்ஸா, இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியும் சசிகலா தரப்பில் இருந்து எழுப்பப்படுகிறது.

அதற்குக்கூட, பகல் நேரங்களில் அதாவது… கோட்டையில் இருக்கும்போது மட்டும்தான் ஓ.பி.எஸ். இப்படி நடந்துகொள்கிறார்.

மற்றபடி கோட்டையில் இருந்து கார்டனுக்குப் போனதுமே அவர் அப்பாவி ஓ.பி.எஸ்ஸாக மாறிவிடுகிறார் என்றும் பதில் சொல்லப்படுகிறது.

பா.வளர்மதிக்குப் பதவி!

‘கோட்டையில் அப்படித்தான்மா இருக்க வேண்டியுள்ளது. இதுபோன்று மீட்டிங்குகளை நடத்தாமல்போனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்டப்பெயர் வந்துவிடும்’ என்று விளக்கத்தையும் சசிகலா தரப்புக்குத் தெரியப்படுத்திவிடுகிறாராம், ஓ.பி.எஸ்.

அவர், நல்லவரா… கெட்டவரா என்று புரியாத சூழ்நிலையில்தான் கார்டன் இருக்கிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு கார்டன் செல்வாக்கு என்னவென்று காட்டுவதற்காகத்தான்… சசிகலாவை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய பா.வளர்மதிக்கு பாடநூல் வாரியத் தலைவராகப் பதவி கொடுத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நான்காவது நாளாக நடந்த கூட்டத்தில், எந்த இடத்திலும் ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லாமல் நடத்தியதும் அவரை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

‘இந்தியா டுடே’ பத்திரிகையின் விழாவில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. மற்றபடி, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் என்றுவரும் தகவல்களில் உண்மை இல்லை.

இது வெளியில் தெரியாத, வெளியில் சொல்ல முடியாத உட்கட்சிப் போராட்டம்” என்கின்றனர்.

உண்மையான விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவது சகஜம்தானே!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.