துணை முதல்வர் ஜெயலலிதா! நடராஜன் போட்ட திட்டம், சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம் – 14

0
650

எம்.ஜி.ஆர் அணி – ஜெயலலிதா அணி!

இரண்டாவது முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆர், உடல்நலம் தேறி இந்தியா திரும்பினார். உடல்நலம் தேறி இந்தியா வந்தவருக்கு, மனநோயை வரவழைக்கும் அளவுக்குப் பிரச்னைகளை உருவாக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா.

தமிழகத்துக்குள் காலடி வைத்ததும், ‘தான் இல்லாத போது கட்சிக்குள் என்ன நடந்தது’ என்று வழக்கம்போல் எம்.ஜி.ஆர் விசாரிக்க ஆரம்பித்தார்.

jaya_old_3_15593தனக்கு நம்பிக்கையான பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், கட்சிக்காரர்கள் என எல்லோரிடமும் விசாரித்தார். எல்லோரும் விதவிதமான தகவல்களைச் சொன்னார்கள். எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தன.

காரணம், கட்சியின் விசுவாசிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர் அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைத்து வைத்திருந்தார் நடராஜன்.

தொலைபேசியில் மிரட்டிய டெல்லி!

http___photolibrary-vikatan-com_images_gallery_album_2014_04_16_202985_15248எம்.ஜி.ஆர் குழப்பத்தில் இருந்தார். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு, குழப்பத்தோடு எம்.ஜி.ஆருக்கு உதறலையும் சேர்த்து உண்டாக்கியது.

டெல்லியில் இருந்து பேசியவர்கள், ‘ஜெயலலிதாவுக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும்’ என்றார்கள். எம்.ஜி.ஆர் சார்பில் டெல்லிக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தவர் அவருடைய உதவியாளர் பரமசிவம். அவர் பக்குவமாக “எம்.ஜி.ஆர் நேரில் வந்து விபரமாகப் பேசுவார்” என்று பதில் சொன்னார்.

ஆனால், டெல்லி அதைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கவில்லை. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னது. உச்சக்கட்ட வெறுப்படைந்த எம்.ஜி.ஆர் ஒருகட்டத்தில், ‘பதவியைத் துறந்துவிடுவேன்’ என்று டெல்லியைப் பயமுறுத்திப் பார்த்தார்.

அதற்கு, ‘உங்கள் பதவி விலகலை கவர்னர் ஏற்றுக் கொள்ளமாட்டார்’ என்று எதிர்முனையில் இருந்து மிரட்டல் வந்தது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத பரமசிவம், “தலைவர் இப்போது ஓய்வில் இருக்கிறார், பிறகு பேசுங்கள்…” என்று சொல்லித் தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்.

டெல்லியில் இருந்து வந்த மிரட்டல் எம்.ஜி.ஆரை உலுக்கியது. ‘ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்யக்கூடியவர்தான்’ என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால், ‘சசிகலாவையும் நடராஜனையும் குறைத்து மதிப்பிட்டது எவ்வளவு பெரிய தவறு’ என்பதை எம்.ஜி.ஆர் அப்போது உணரத் தொடங்கினார்.

‘கட்சிக்குள் ஜெயலலிதாவின் கதையை முடித்துவிட்டால், நடராஜன், சசிகலாவின் கதையும் தானாக முடிந்துவிடும்’ என்று ஆத்திரத்தில் முடிவெடுத்தார்.

“அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவுடன் பேசக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

அதைக் கறாராகக் கண்காணிக்க தனது உதவியாளர் பரமசிவத்திடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

ஆனால், மிகத் தாமதமாக பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவால் எந்தப் பயனும் விளையவில்லை. எம்.ஜி.ஆர் கையை மீறி எல்லாம் அப்போதே போய் இருந்தது. உடைந்து போய் இருந்த எம்.ஜி.ஆரை பத்திரிகையாளர் சோலை வந்து ஆறுதல் சொல்லித் தேற்றினார்.

டெல்லியில் பறந்த ஜெயலலிதா கொடி!

அமெரிக்காவில் இருந்து திரும்பிய மறுவாரமே டெல்லி கிளம்பினார் எம்.ஜி.ஆர். இந்தமுறை, தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல் நண்பர் ஒருவருடன், ‘கிரேட்டர் கைலாஷ்’ என்ற இடத்தில் தங்கினார்.

டெல்லியில் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ஆனால், எல்லாப் பேச்சுவார்த்தையின் நோக்கமும் ஒன்றாகவே இருந்தது. “ஜெயலலிதாவை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும்;

அவருக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும்” என்ற ஒரே நோக்கம்தான் அத்தனைப் பேச்சுவார்த்தைகளிலும் வலிமையாக வலியுறுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர் மிரண்டு போனார். அவருக்கு காய்ச்சல் கண்டது.

அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தம்பிதுரை, தன் பங்குக்கு எம்.ஜி.ஆரின் காய்ச்சலை கூடுதலாகக் கொதிக்கவைத்தார்.

“எம்.ஜி.ஆரின் பதவியை டெல்லியில் பேசி தான்தான் காப்பாற்றி வருகிறேன்” என்றார்.

“ஜெயலலிதா, நீங்கள் இருக்கும்போதே முதலமைச்சர் ஆகிவிடுவார். அதற்கு நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உங்கள் ஆட்சியைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை டெல்லி உருவாக்கும்” என்று சொல்லி எம்.ஜி.ஆரைப் பயமுறுத்தினார்.

தம்பிதுரையிடம் தனது பதற்றத்தை வெளிக்காட்டாத எம்.ஜி.ஆர், விரைவில் தேர்தல் வந்துவிடும். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூலாகப் பதில் சொன்னார்.

rajiv_jaya_1_15138

ஆனால், உள்ளுக்குள் இந்த விவகாரத்தை இதோடு விடக்கூடாது என்று முடிவுகட்டினார். டெல்லியில் எம்.ஜி.ஆர் சிலரைச் சந்திக்க முடிவுசெய்தார்.

ஆனால், அங்கு அவருக்கு ஆதரவாக எந்தக் கரமும் நீளவில்லை. எல்லாக் கதவுகளும் எம்.ஜி.ஆருக்கு அடைக்கப்பட்டு இருந்தன.

ஆனால், ஜெயலலிதாவின் ஆதிக்கம் டெல்லியில் கொடி கட்டிப் பறந்தது. எம்.ஜி.ஆரின் கொடியை அகற்றிவிட்டு, அ.தி.மு.க என்ற கம்பத்தில் ஜெயலலிதாவின் கொடியே அப்போது டெல்லியில் பறந்தது. எம்.ஜி.ஆர் புழுவாகத் துடித்துப்போனார்.

சோகத்தோடு விமானம் ஏறிய அவர், தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். சென்னையில் வந்து இறங்கியதும், அமைச்சர்கள் பொன்னையன், முத்துச்சாமி ஆகியோரை அழைத்தார்.

ஜெயலலிதாவிடம் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் யாராவது பேசுகிறார்களா? என்று விசாரித்தார். அவர்கள் எம்.ஜி.ஆருக்குத் திருப்தியான பதில் ஒன்றைச் சொல்லி வைத்தனர்.

ஆனால், உண்மையில், ஜெயலலிதாவோடு பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருந்தனர். பேசாமல் ஒதுங்கியவர்களை, நடராஜன் இழுத்துவந்து பேசவைத்தார்.

அப்படிச் செய்ய ஒவ்வொருவருக்கும் ஒரு விலையை நிர்ணயம் செய்து வைத்திருந்தார் நடராஜன். எம்.ஜி.ஆருக்கு வேதனையைத் தரும் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், டெல்லியில் இருந்து மீண்டும் அவருக்கு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பும் அவரை மேலும் நோகடிக்கும் ஒன்றாகவே நீடித்தது. ஒருபக்கம் ஜெயலலிதாவோடும், மறுபக்கம் டெல்லியோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

கதை தொடரும்…

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.