தமிழகத்தில் வார்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு: வர்த்தக கூட்டமைப்பு!!

0
864

நேற்று முன்தினம் வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ். ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வார்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் பல ஆயிரம் மரங்கள் விழுந்தன. விவசாய நிலங்களுக்கும் இந்த புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைத் தோட்டங்கள், பப்பாளிப்பழ தோட்டம், வயல்கள் போன்றவை புயல் மற்றும் பலத்த மழையால் அழிந்துவிட்டன. பல இடங்களில் கால்நடைகள் இறந்துவிட்டன. நகர்ப்புறங்களில் கார்கள், கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ரெயில், விமானம், பஸ் போக்குவரத்து ஆகியவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை பாதிக்கப்பட்டன.

ஒட்டு மொத்தமாக கணிக்கும்போது, வார்தா புயலால் ரூ.6 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு அசோசெம் உறுப்பினர்கள் தேவையான உதவிகளை செய்யவேண்டும். உணவு, உடை, படுக்கைகள், போர்வை உள்பட அத்தியாவசிய தேவைகளை அசோசெம் அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.